நீலகிரிக்கு சுற்றுலா (மட்டும்) வந்த முதல்வர்
- Betta
- Apr 6
- 4 min read
06.04.2025 - மாண்புமிகு முதல்வர் மு க ஸ்டாலின் நீலகிரி பயணம்.
நீலகிரிக்கு விருந்தினராக வந்தேன் என்று உரையை துவங்கினார் முதல்வர்.
ஆனால் வெறும் கையை வீசி வந்தேன் என்று சொல்லாமல் சொல்லிச்சென்றார் முதல்வர். நீலகிரிக்கு அடித்தளமிட்டது திமுக என்றும் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பல திட்டங்களை கொண்டுவந்ததாக கூறி மேலும் பல புதிய திட்டங்களை அறிவித்துள்ளார்.
முதல்வரின் அறிவிப்புகளை அலசுவது தான் இந்த பதிவு.
நீலகிரிக்கு அடித்தளமிட்டது திமுக என்று கூறுகையில், முந்தைய திமுக ஆட்சி காலத்தில் ஏரியை புதுப்பித்ததாக கூறினார். ஆனால் இன்றோ குந்தா அணையே பராமரிப்பு இன்றி, தூர்வாராமல் பல அடிகளுக்கு வண்டல் மண் வடிந்து நிற்கிறது. கீழுள்ள மண் போக மேலே ஒருசில அடிகளுக்கு தான் தண்ணீர் நிற்கிறது. முறையாக தூர் வாரியிருந்தால் கூடுதல் நீர் சேர்த்திருக்கலாம், கூடுதல் மின்சாரமும் உற்பத்தி செய்திருக்கலாம்
தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தை (TANTEA) உருவாக்கியது திமுக அரசு என்றார். உண்மை தான். ஆனால் இன்று அதன் நிர்வாகம் படுதோல்வி அடைந்து, ஊழியர்களுக்கு முறையே ஊதியம் தர இயலாத நிலைக்கும் சென்றது. TANTEA ஓய்வுபெற்ற பெருன்பான்மை ஊழியர்களுக்கு இன்று வரையிலும் உரிய பணிக்கொடையை வழங்காமல் இழுத்தடிக்கிறது நிர்வாகம். ஓய்வூதியம் கூட இல்லாமல், மருத்தவம், பிள்ளைகள் கல்வி திருமணம் என அன்றாட செலவுக்கு கூட TANTEA ஊழியர்கள் போராடிவருகிறார்கள். அரசிடம் நிதி இல்லை, இப்போதைக்கு பணிக்கொடை கிட்டாது என்னும் செய்தியும் கசிகிறது. ஏழாம் ஊதிய திட்டத்தின்படியும் உரிய தொகை வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு தேயிலை தோட்ட கழக உழைப்பாளர்களுக்கு 20% தீபாவளி வெகுமதி அளித்ததாக கூறினார். மகிழ்ச்சி. அதே போல் மற்ற தேயிலை விவசாயிகளுக்கு தேயிலை வாரியம் அறிவித்தது போல உற்பத்தி செலவுடன் கூடிய ஆதார விலை கடந்த 4 ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. அதே போன்று உதகை தேயிலை தூள் நியாய விலை கடைகள் வாயிலாக ஈட்டிய லாபத்தில் உரிய பங்கு வழங்கப்படாமல் நிலுவையில் இருக்கிறது. இந்த அறிவிப்பு வரும் என தேயிலை விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்போடு இருந்தார்கள் ஆனால், ஏமாற்றத்தை தந்தார் முதல்வர்.
பழங்குடிகள் மற்றும் எளிய மக்கள் 10000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கியதாக தெரிவித்தார். சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டுகளில், விஞ்ஞான யுகத்தில் இத்தனை ஆண்டுகள் மின்சாரம் கிட்டாத நிலையில் அம்மக்களை வைத்திருந்தது அரசுக்கு அவமானம். மேலும் மின்சார இணைப்பு கிடைக்காத மக்களின் வீட்டிற்கு விரைந்து இணைப்புகள் வழங்கிட வேண்டும்.
2009 வெள்ளம் மற்றும் 2019 நிலச்சரிவு துயர நேரத்தில் களத்திற்கு வந்து மக்கள் பணி ஆற்றியதாக கூறினார். உண்மை தான். ஆனால் நீலகிரி ஒரு நிலச்சரிவு பகுதி என்று நன்கு அறிந்துகொண்டே சில்ல ஹல்லா நீரேற்று புனல் மின் திட்டத்தை கொண்டு வந்துள்ளார் முதல்வர். இதனால் மேக்குநாடு குந்தே பகுதிகளில் பல கிராமங்கள் நீரில் மூழ்குவதோடு, பெரும் நிலச்சரிவு அபாயம் ஏற்படும். நிலச்சரிவு பகுதியில் எதற்கு இத்தனை பெரிய கட்டுமானத்தை கொண்டு வருகிறார் என்பது ஆச்சர்யம். இதிலும் அதிர்ச்சி என்னவென்றால் 2013இல் அம்மையார் ஜெயலலிதா இந்த அணை திட்டத்தை அறிவித்தபோது, இதன் பாதகங்களை கூறி எதிர்த்தவரும் அன்றைய எதிர்க்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் தான். முதல்வர் ஆனதும் ஏன் இந்த மாற்றம் என்று திகைக்கிறார்கள் மக்கள்.
இந்தியாவில் வளர்ச்சி மாநிலம் தமிழ்நாடு என்று பெருமிதம் கொண்டார். தமிழநாட்டின் மின் தேவை, நீர் ஆதாரம், சுற்றுலா வருமானம் என பல முக்கிய ஆதாரங்களை தருவது நீலகிரியே. ஆனால் இதற்கான உரிய பிரதிபலன் கிடைத்ததே இல்லை. வளர்ந்தது தமிழ்நாடு வாடியது நீலகிரி.
அடுத்ததோ அதிர்ச்சி அறிவிப்பு. வனவிலங்கு தாக்கி உயிரிழப்போருக்கு தரப்படும் நஷ்டஈடு தொகை 3 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்தப்பட்டது என்றார். இதற்காக மக்கள் யானையிடம் மிதிபட்டு சாக வேண்டுமா? இது என்ன அறிவிப்பு? இதை எந்த வகையில் சேர்ப்பதென்ற தெளிவில்லை. வனவிலங்குகள் வாழ்விடத்தை பெருக்கி விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான போராட்டத்தை நிறுத்துவது தானே அரசின் கடமை. அதை உறுதி செய்யாமல், மிருகம் தாக்கி இறந்தால் 10 லட்சம் என்ற அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது.
நீலகிரி வரையாடுகளை காக்க ₹25 கோடி ஒதுக்கியதாக கூறினார். இது நீலகிரிக்கு மட்டும் உரித்தானது அல்ல. மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பல மாவட்டங்களில் பணிகள் நடக்கின்றன. மேலும் ஆராய்ச்சியின் போது அழுத்தம் பெருகி வரையாடு இறந்ததாக செய்தி வந்து பெரும் பரபரப்பை கிளப்பியது. அதற்க்கு பின் ‘Project Nilgiri Tahr’ என்ற திட்டம் எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு எந்த ஒரு அறிக்கையும் இல்லை.
கூடலூர் பேருந்து நிலையம் - பணிகள் முழுமை அடையாமல் பாதியில் உள்ளது.
₹31 கோடி செலவில் மருத்துவமனை பணிகள். 61 மருத்துவ உட்கட்டமைப்பு பணிகள். பள்ளி கல்வி துறையில் சார்பில் 197 பணிகள். அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 404 பணிகள் என குறிப்பிட்டார். மருத்துவம் மற்றும் பிள்ளைகள் கல்வி சார்ந்து எத்தகைய மேம்பாடு வந்தாலும், வரவேற்கதக்கதே.
குன்னூரில் புதிய கலை கல்லூரி - வரவேற்கத்தக்கது
குன்னூர் அருகே பத்துமையில் 'மினி டைடெல் பார்க்' என அறிவித்தார் முதல்வர். இதில் பெரும் பிரச்னை உள்ளது. சில்ல ஹல்லா அணைபோல இதுவும் பல ஏக்கர் வனத்தை அழிக்கும். தமிழக அரசு தலைமை கொறடா மாண்புமிகு கா. ராமச்சந்திரன் அவர்களின் சொந்த ஊரான இள்ளித்தோரை அருகே அமைந்திருப்பது தான் இந்த பத்துமை ஹட்டி. டைடெல் பார்க் வந்தால், இந்த பகுதியில் இருக்கும் வனம், குறிப்பாக மூலிகை தாவரங்கள், வன விலங்குகள் என பலவற்றிற்கு பாதிப்பு ஏற்படும். ஆகவே இடத்தை நகர்புறத்திற்கு மாற்றுவது நல்லது.
₹70 கோடியில் உதகை சூழியல் பூங்கா. மக்களே...! அன்பு முதல்வரே...! இது மத்திய அரசின் திட்டம். பாரம்பரியம் மற்றும் சூழியல்சுற்றுலா மேம்பாட்டிற்காக மத்திய சுற்றுலா துறை அமைச்சகம் , Scheme for Special Assistance to States for Capital Expenditure (SASCI) என்ற திட்டத்தின் கீழ் அறிவித்த திட்டம் தான் இது. உண்மையில் இது தேவாலா பகுதியில் பூந்தோட்டம் (Garden of Flowers) என்ற பெயரில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களால் நவம்பர் 28, 2024 அன்று அறிவிக்கப்பட்டது. பல காரணங்களால் இது உதகைக்கு மாறியது. திட்டம் மத்திய அரசுடையது, முழு நிதியும் மத்திய அரசு தரும். இடம் மட்டும் மாநில அரசு. மேற்பார்வையும் மாநில அரசு. மத்திய அரசின் திட்டத்தை மாநில அரசின் திட்டமாக அறிவிப்பது, முதலமைச்சர் நாற்காலிக்கு அழகல்ல.
33 ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா வேண்டிய பழங்குடிகளுக்கு, பட்டா தரும் அறிவிப்பு. முதற்கட்டமாக 18 பயனாளிகள் பெற்றனர். மீதம் இருக்கும் பழங்குடிகளுக்கும் விரைவில் வழங்கினால் மகிழ்ச்சி.
முதல்வரின் 6 அறிவிப்புகள்
வீடில்லாதவர்களுக்கு கூடலூர் அருகே ₹26 கோடி செலவில் 300 வீடுகள் கட்டும் அறிவிப்பு. இது கலைஞர் நகர் என வழங்கப்படும். கூடலூர் செல்லும் வழியில் ஹனுமாபுறம் அருகே பல வீடுகள் கட்டப்பட்டுள்ளன. உரிய வாழ்வாதாரம் இல்லாமல் வீட்டை மட்டும் வைத்து மக்கள் என்ன செய்வார்கள். முதலில் வாழ்வாதாரத்தை உருவாக்குங்கள்.
₹10 கோடி செலவில் பழங்குடிகள் அருங்காட்சியகம், ஆராய்ச்சி மையம். முத்தோரை பாலாடாவில் ஏற்கனவே பழங்குடிகள் ஆராய்ச்சி மையம் உள்ளது. இதுவும் மாநில அரசின் பழங்குடிகள் நலத்துறையின் கீழ், ஒழுங்காக செயல்படாத மையமாக இருக்கிறது. இருப்பதையே செவ்வனே செயல்படவைக்க முடியவில்லை, பிறகு எதற்கு புதிதாக ஒன்று. பழங்குடிகளை கவர வெத்து அறிவிப்பாகத்தான் இது உள்ளது.
எங்கும் ஏறலாம் எங்கும் இறங்கலாம் (Hop On Hop Off) என்ற பெயரில் ₹5 கோடி செலவில் சுற்றுலா பேருந்துகள். ஒரு பயணசீட்டு எடுத்தால் போதும் சுற்றுலா சிறப்பு பேருந்தில் ஏறி உதகை முழுவதும் சுற்றலாம், இதனை உதகை மக்கள் அனைவரும் அறிவர். இது 15 ஆண்டுகளுக்கு முன்பே உதகையில் இருக்கிறது. மிகவும் பழைய திட்டம். பெயர் மட்டும் தான் புதியது.
₹20 கோடி செலவில் பல அடுக்கு வாகன நிறுத்தம். சிறப்பு. ஆனால் இ-பாஸுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துவிட்டு. பல ஆயிரம் வாகனங்களை அனுமதித்துவிட்டு, சில நூறு வாகன நிறுத்துமிடம் கட்டி என்ன பயன்?
கூடலூர் நாடுகாணி தாவிர மரபியல் பூங்கா. இது ஏற்கனவே பல ஆண்டுகளாக இருப்பது தான். ₹3 கோடி செலவில் மேம்படுத்த போகிறார்கள். இதை சிறப்பு திட்டம் என்று சொல்லவே முடியாது.
₹35 கோடி செலவில் சமூதாய கூடங்கள். இவற்றை அந்தந்த சட்ட மன்ற உறுப்பினர்களே கட்ட முடியும். இதனை எதற்கு முதல்வர் சிறப்பு திட்டம் என அறிவிக்க வேண்டும்.
சிறப்பு என அறிவித்த 6 திட்டங்களும் வெத்து திட்டங்கள் தான்.
முக்கியமாக, நீலகிரி மருத்துவமனை, இது அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டம். கல்லூரி ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. மருத்துவமனையை திறந்து வைத்துள்ளார் முதல்வர்.
மொத்தத்தில் வெறும் சுற்றுலா பயணமாக தான் வந்திருக்கிறார் என்று கூறுகிறது முதல்வரின் அறிவிப்புகள். மக்களுக்கு வெறும் கையை நீட்டி உள்ளார்.
மக்கள் தங்கள் கருத்தை கீழே (Comment Section) பதிவு செய்யலாம்.
Comments