அமைச்சர் பதவி: திரு மஞ்சை மோகன் கருத்து: பெட்டா பதில்
- Revanth Rajendran
- Nov 10, 2024
- 3 min read
பூர்வகுடிக்கு அமைச்சர் பதவி தரவேண்டி வலியுறுத்திய கட்டுரைக்கு, படக தேச கட்சி தலைவர் மரியாதைக்குரிய மஞ்சை மோகன் அவர்களது விமர்சனத்திற்கு பதில்
முன்வருவது சமூக ஊடகம் மூலம் பெறப்பட்ட கருத்து, பின்வருமாறு பெட்டாவின் பதிலை காணலாம்
“திமுக கட்சியின் நிலைப்பாடு படுக சமுதாயத்தை மீண்டும் பழங்குடி பட்டியலில் இடம்பெற செய்வோம் என்பது....
பல முறை எச்சரிக்கப்பட்டும் படுகர் சமுதாயம் பழங்குடியினர் பட்டியலில் இடம் பெற வாய்ப்பே இல்லை என்பவரை வைத்துக்கொண்டு தேர்தலை சந்தித்தால் டெபாசிட் கூட கிடைக்காது என்பதை 75- ஆண்டுக்கால திமுக நன்கு அறியும்.
இத் தளத்தில் பயணிக்கும் யாருக்கும் அவர் சமுதாயத்தின் மேல் மிகுந்த அக்கறை உள்ளவர் என ஏதாவது ஒரு குறிப்பை சொல்ல சொல்லுங்கள்.
அவருக்கு பூர்வகுடி பட்டம் கொடுத்த கட்டுரையால் சிரித்து மகிழ்ந்தோம். YBA கொள்கையில் உறுதியுடன் நின்றதால் அவரின் தூண்டுதலில், உதகை நகர காவல்துறையினரால் தர, தர வென்று இரவு நேரத்தில் இழுத்துச் செல்லப்பட்டவன். சமுதாய பற்றுள்ள நல்லோர்களின் வழக்கறிஞர்கள் தயவால் கைதாகாமல் விடுவிக்கப்பட்டவன். தூண்டுதலில் வழக்கு கொடுத்தவர் இன்று உயிருடனே இல்லை.
இன்று YBA வாசலில் பத்தோடு பதினொன்றாக நிற்பவருக்கு பூர்வகுடி அடையாளம் தேவையா? பூர்வகுடி என்று எழுதும் முன் உங்கள் தந்தையாரை போன்ற சமுதாயத்திற்கு உழைக்கும் சிலரிடம் தெளிவு பெற்றிருக்கலாம்
மொத்தத்தில் அமைச்சர் பதவி பறிப்பு பூர்வகுடி படுக சமுதாய மக்களுக்கு தமிழக முதல்வர் தந்த தீபாவளி பரிசு.”
நான் எழுதிய கட்டுரையானது ஒட்டுமொத்த படக குடிக்கு உரித்தான மரியாதையை மற்றும் உரிமையை மையப்படுத்தியது. ஆனால் திரு மஞ்சை மோகன் அவர்கள் அரசியல் கண்ணோட்டத்தோடு அதனை படித்திருக்கிறார் என்பதை அவரது விமர்சனம் மூலம் புரிந்துகொண்டேன்.
படக குடியை பழங்குடி பட்டியலில் சேர்ப்பதே திமுகவின் நிலைபாடாம். அதற்க்கு மாறாக க. ராமச்சந்திரன் பேசிக்கொண்டிருக்கிறாராம். கட்சி பலமுறை எச்சரித்தும் அவர் எதிராகவே பேசிக்கொண்டிருக்கிறாராம். சப்பைக்கட்டு என்றாலும் இது மிகவும் சப்பையான கட்டாக அல்லவா உள்ளது.
"அமைதியாய் இரு" என்ற கட்சியின் ஒற்றை கட்டளை போதும், நிர்வாகிகள் அதற்க்கு மேல் வாயையே திறக்க மாட்டார்கள். மீறினால் கட்சியிலேயே இருக்க மாட்டார்கள்.
க. ராமச்சந்திரன் நமது குடிக்கு எதிரான சில கருத்துக்களை கூறியதை நானும் அறிவேன். குறிப்பிட வேண்டியது என்ன என்றால் அதனை அவர் வனத்துறை அமைச்சராக இருந்த காலத்திலேயே கூறி இருக்கிறார். அன்றைக்கே திமுக அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி இருக்கலாம். அவ்வாறு இல்லாமல் மேலும் ஒரு ஆண்டிற்கு மேல் சுற்றுலா துறை அமைச்சராக நீடித்து, தற்போது தானே நீக்கப்பட்டுள்ளார். தாங்கள் குறிப்பிட்டது போல, தேர்தலை மட்டுமே மையப்படுத்தி செயல்படும் கட்சி உண்மையிலேயே நமக்கான உரிமையை பெற்று தருவார்கள் என்று நினைக்கிறீர்களா?
திமுகவை நியாயப்படுத்தும் உங்களது கூற்றானது சிறுதும் ஏற்புடையது அல்ல. அதை நம்பும் அளவுக்கு அரசியல் அறியாதவர்கள் நம் மக்கள் அல்ல.
எந்த ஒரு தனி மனித அரசியல்வாதிக்கும் ஆதரவாக நான் அக்கட்டுரையை எழுதவில்லை. படக பூர்வகுடியின் உரிமையை முன்னிறுத்தியே அதனை வரைந்தேன். மேலும் திமுக என்பதால் அல்ல, அதிமுக பாஜக காங்கிரஸ் என எந்த கட்சி இதை செய்திருந்தாலும் இதையேதான் நான் கூறியிருப்பேன்.
சமுதாய பணியில் ஈடுபடுகையில், காவல் துறை ஏவப்பட்டு நீங்கள் கைதானதை, உங்கள் கருத்தின் மூலம் தெரிந்துகொண்டேன். அதிகாரம் கையில் இருக்கும் ஆணவத்தில் எதிர் கருத்து கூறுபவர்களை அடக்கும் பாசிச மனப்பான்மை கண்டனத்திற்குரியது. அதில் மாற்று கருத்து கிடையாது.
தனிப்பட்ட முறையில் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் ஆனால் அதற்காக ஒட்டுமொத்த பூர்வகுடிக்கும் கிடைக்க வேண்டிய வாய்ப்பு பறிபோனதை தீபாவளி பரிசு என குறிப்பிட்டது சரியல்ல. 'ஒதுக்கப்பட்ட பூர்வகுடி' என நான் குறிப்பிட்டது க. ராமச்சந்திரன் ஒருவரை மட்டும் அல்ல, நீலகிரி முழுவதும் பரவி வாழ்ந்து வருகிற 4 லட்சத்திற்கும் மேலான நம் மொத்த குடிமக்களையும் தான்.
இந்த அமைச்சர் பதவி என்பது நம் மொத்த படக குடிக்கும் கிடைக்க வேண்டிய உரிமை, அங்கீகாரம். நம் அனைவரின் சார்பாக ஒருவருக்கு தான் அந்த வாய்ப்பு சேரும். அந்த ஒருவரை தேர்ந்தெடுக்கும் பலமும் நம்மிடத்தில் தான் அமைத்திருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்டவர் நமக்கு எதிராக செயல்பட்டாரெனில் அவரை அடுத்த தேர்தலில் நாம் தோற்கடிப்போம். இதுவே சனநாயகத்தின் மாண்பு, இதுவே சனநாயகத்தில் மக்கள் பெற்றுள்ள பலம். இதை உணர்ந்திருப்பதே அரசியல் முதிர்ச்சி.
தற்போதைய சூழலில் க. ராமச்சந்திரன் அவர்கள் தவறு செய்தார் என்று கருதினால், அவருக்கான பதிலை வரும் தேர்தலில் நாம் தருவோம். திமுகவே இதை உணர்திருந்தால் அடுத்த தேர்தலில் க. ராமச்சந்திரனுக்கு பதிலாக நம்மவர் வேறு யாராவது தகுதி உடையவரை வேட்பாளராக நிறுத்தட்டுமே.
பூர்வகுடியின் பிரதிநிதியை அந்தந்த குடிமக்கள் தானே முடிவு செய்ய வேண்டும். படக என்றல்ல, தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி, மராத்தி என அனைத்து இனங்களுக்கும் இந்த விதி பொருந்தும் அல்லவா? அதுதானே சமூக நீதி?
மாறாக நாம் யார் என்றே தெரியாதவர்கள், நமது வாழ்வியல் புரியாதவர்கள் நம்மவர்க்கு வாய்ப்புகளை மறுப்பதை தீபாவளி பரிசாக ஏற்றுக்கொள்ளும் அரசியல் நிலைப்பாட்டை என்னவென்று விமர்சிப்பது. இது வருத்தம் அளிக்கிறது.
இன்று அமைச்சர் வாய்ப்பு இல்லை என்பதை தீபாவளி பரிசாக ஏற்றுக்கொண்டீர்கள். நாளை தேர்தலில் போட்டியிடவே வாய்ப்பு இல்லை என்றார்களானால் அதனை பொங்கல் பரிசாக ஏற்பீர்களா?
இது அனுமானம் அல்ல, திமுக ஏற்கனவே இதனை செய்துள்ளது. மீண்டும் செய்யமாட்டார்கள் என என்ன நிச்சயம்? ஒருவேளை அதற்கான அடித்தளமாக கூட இந்த பதவி பறிப்பு இருக்கலாம் அல்லவோ?
பூர்வகுடிகளாக இருந்தும் கூட சொந்த மண்ணில் அதற்கான அடையாளம் இல்லாமல் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், வேற எந்த சிறு அவமரியாதையையும் கூட ஏற்றுக்கொள்ளும் மனதில் நாம் இல்லை. இருக்கவும் கூடாது. எதிர்வினை ஆற்றியாகவே வேண்டும்.
கட்சி வேறுபாடின்றி, சொந்த விருப்பு வெறுப்பு இன்றி மீண்டும் வலியுறுத்திடுவோம். பூர்வகுடியின் பிரதிநிதியான க. ராமச்சந்திரன் அவர்களுக்கு அமைச்சர் பதவி தந்திட வேண்டும்.
எனது தந்தையாரை போன்ற சமுதாயத்திற்கு உழைக்கும் சிலரிடம் தெளிவு பெற்றிருக்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளீர்கள். தங்கள் தகவலுக்காக, எனது தந்தை உட்பட நமது குடியின் பல மூத்தவர்கள் இந்த நிலைப்பாட்டிற்கு ஆதரவு தந்திருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆகவே நமது படக குடிமக்கள் அனைவருக்கு இந்த பதில் மூலம் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். தேர்தல் அரசியலை களைந்து பூர்வகுடி மக்களின் உரிமை, அங்கீகாரத்தை மையமாக வைத்து அந்த கட்டுரையை படியுங்கள்.
நன்றி
Comments