சில்ஹல்லா அணை - மக்கள் எதிர்ப்பது ஏன்?
- Betta
- Mar 29
- 2 min read
மேக்குநாடு குந்தே சீமையின் அழிவு
அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் பொதுவாக ஒரு எண்ணம் உண்டு, அதிகாரத்தோடு எதை சொன்னாலும் இந்த மக்கள் கேட்டுக்கொள்வார்கள் என்று. அதுபோலவே 70 ஆண்டுகாலமாக, வளர்ச்சி பாதுகாப்பு என்ற பெயரை சொல்லி பூர்வகுடிகளுக்கு சிறிதும் பயனில்லாத பல பணிகளை தொடர்ந்து செந்தமிழ்நாட்டின் அரசு செய்து வந்துள்ளது. மேலும் நீலகிரியின் பூர்வகுடிகளை அலட்சியப்படுத்தி, ஓரங்கட்டி, நம்மை துன்பத்தில் தள்ளியே பல திட்டங்கள் கொண்டுவர பட்டன.
இன்று சில்ஹல்லா அணை குறித்து அனைவரும் பேசி வருகிறோம், ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே அட்டுபாயில், குந்தே, அவலாஞ்சி, என பல அணைகளை கட்ட, பல்லாயிரம் ஏக்கர் வனத்தையும், நிலத்தையும் அழித்தது மட்டும் அல்லாமல், பல பூர்வகுடி படக கிராமங்களையும் இரண்டாக பிளந்தார்கள். ஊரையும் இழந்து, உரிய இழப்பீடும் கிடைக்காமல் பூர்வகுடிகள் இன்று வரையிலும் முன்னேறி வர போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் தான், எதை செய்தாலும் இந்த அப்பாவி மக்கள் அமைதியாய் இருப்பார்கள் என்று நினைத்து சில்ஹல்லா என்னும் அழிவு திட்டத்தை மாநில அரசு கொண்டு வர முயல்கிறது.
மேக்குநாடு, கன்னேரி அருகே ஒரு அணை , குந்தே சீமை, கீய குந்தே அருகே ஒரு அணை. இந்த இரு அணைகளை இணைக்க 7 கிலோமீட்டர் தூரத்திற்கு மலைகளை குடைந்து சுரங்கம். வெறுமனே கேட்பதற்கு அதிர்ச்சி தருகிறது இந்த திட்டத்தின் வடிவம். உண்மையில் செயல்படுத்தினால் மொத்த மேக்குநாடு குந்தே சீமையும் சிதைந்து விடும்.
வெறும் விவசாய நிலம், வனம் மட்டும் அல்ல, பல மேக்குநாடு குந்தேசீமை பெரும்பகுதி கிராமங்கள் அழியும். பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்த பூர்வகுடி மக்கள், கிராமம் கிராமமாக வெளியேற வேண்டி வரும்.
அணையால் அனைவருக்கும் அழிவு
விவசாய நிலம் மட்டும் அழியும் என்று நினைக்க வேண்டாம். பல ஹட்டிகள் அழியும் பல ஊர்கள் காலி ஆகும். விவசாய நிலம் மட்டும் அழியும் அதற்க்கு இழப்பீடு கிட்டும் எனபதல்ல. அணை வந்தால் நிலத்தோடு சேர்ந்து, மொத்த சீமையும் அழியும் என்பது தான்.
அட்டுபாயில் போன்ற அணைகளை கட்டியதற்கே, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னேரியில் வரும் அணையால் தேனாடு, மைனலை, கோத்திபென், மாசிக்கண்டி, பெங்கால், கன்னேரி, மந்தனை, தங்காடு, ஒரநள்ளி, பெம்பட்டி, பேலிதளா, மணிஹட்டி, மீக்கேரி, அப்புக்கோடு, துளிதலை, கல்லக்கோரை, பாலகொலா, முதுகுலா, நுந்தளா, பாலாடா, ஒசஹட்டி, புதுஹட்டி, ஸ்ரீராம் நகர், மணலாடா நகர் பகுதி என 20இற்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படும்.
கீயகுந்தே அருகே வரும் அணையால் கெத்தே, கீயகுந்தே பகுதிகள் பெரும் நிலச்சரிவு அபாயத்தில் சிக்கும்.
அணைகளுக்கு இடையில், 7 கிலோமிட்டர் தூரத்திற்கு சுரங்கம் அமைப்பார்கள். இடையில் உள்ள மலைகளை பெரும் வெடிவைத்து தகர்ப்பார்கள். ஏற்கனவே மென்மையான பகுதியாக இருக்கும் இந்த நிலையில், வெடியின் அதிர்வுகளால் மேலும் அபாயமாகும். 15 கிலோமிட்டர் சுற்றளவில் உள்ள மற்ற பல கிராமங்களில் நில அதிர்வு உணரப்படும் இதன் விளைவாக நிலச்சரிவு ஏற்பட்டு, வாழ்வதற்கு ஆபத்தான இடமாக மேக்குநாடு குந்தே பகுதிகள் உருமாறும்.
மொத்தத்தில் கீயகுந்தே முதல் கன்னேரி, நுந்தளா தொட்டு உதகை வரையிலும் பாதிப்பு இருக்கும்.
பல்லாயிரம் ஆண்டுகளாக உருவாக்கிய ஊரையும், மூதாதையர்களும் தாய் தந்தையர் வாழ்ந்து வந்த வீட்டையும் தற்போது அழிக்க அணை வருகிறது.
வீட்டையும் ஊரையும் விட்டுச்செல்லும் நிலை ஏற்படும்
அரசு கொண்டு வரும் திட்டம், இதை என்ன செய்ய முடியும்?
இந்த அரசை கொண்டு வந்ததே நாம் தான் என்பதை மக்கள் தெளிவாக உணரவேண்டும். அரசமைக்க வேண்டும் என்று கேட்டு மக்கள் இடத்தில் தான் அரசியல் கட்சிகள் கைகூப்பி நின்றனர். மக்களாகிய நாம் தான் வாக்களித்து இந்த அரசை உருவாக்கினோம். அரசு பெரிதல்ல, அரசை விட மக்கள் பலம் தான் பெரியது.
அரசே கொண்டு வந்தாலும் அழிவை ஏற்கவேண்டும் என்ற அவசியம் மக்களுக்கு இல்லை. அரசின் பல அழிவு திட்டங்கள் மக்கள் போராட்டத்தால் தடுக்கப்பட்டன என்பதை நாம் உணரவேண்டும். சில்ஹல்லா திட்டமும் தடுக்கப்படும் என்று உறுதிகொள்ள வேண்டும்.
மலை தேசத்திற்கு சிறிதளவும் பயனில்லாத இந்த மாபெரும் பேரழிவு திட்டத்தை அனுமதிக்க வேண்டுமா?
வெறும் 1000 மெகா வாட் மின் உற்பத்திக்காக பல்லாயிரம் பூர்வகுடி படக மக்கள் தங்கள் வீட்டையும் ஊரையும் இழந்து அகதிகளாக வேண்டுமா?
சில்ஹல்லா பாதுகாப்பு இயக்கம்.
இந்த திட்டத்தை எதிர்ப்பதற்காக உருவான மக்கள் இயக்கம் தான் சில்ஹல்லா பாதுகாப்பு இயக்கம். பூர்வகுடி மக்களும் இந்த அணையை எதிர்க்கும் அனைவரும் எழுச்சியோடு உருவாக்கிய இயக்கம் தான் இந்த சில்ஹல்லா பாதுகாப்பு இயக்கம். அழிவை கொண்டு வரும் இந்த அணையை எதிர்க்க மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவே இயக்கம் உருவானது. மண்ணை காக்க, மக்களை காக்க, தன்னெழுச்சி கொண்டு பூர்வகுடிகள் அனைவரும் திரண்டு வர வேண்டும்.
மக்கள் திரண்டு வந்து சில்ஹல்லா அணை திட்டத்தை எதிர்க்க வேண்டும்.
நமது வாழ்வையும் ஊரையும் அடையாளத்தையும் காக்க ஒன்றிணைவோம்.
அணை வடிவில் வரும் அழிவை எதிர்ப்போம்
コメント