குந்தே | மேல் பவானி நீரேற்று புனல் மின் திட்ட அறிவிப்புகள்
- Revanth Rajendran
- Apr 7
- 2 min read
சில்ல ஹல்லா நீரேற்று புனல் மின் திட்டம் என்ற பெயரில் நீலகிரிக்கு மாபெரும் அழிவை கொண்டுவரும் அரசின் முயற்சியை மலை தேசத்தின் மக்கள் எதிர்த்துவருகின்றனர். இரண்டு அணைகள், 7 கிலோமீட்டர் தூரத்திற்கு சுரங்கம் என மேக்குநாடு குந்தே சீமையை சீர்குலைக்க வருகிறது இந்த திட்டம். சில்ல ஹல்லா மட்டும் அல்லாமல், நீலகிரியில் குறிப்பாக குந்தே சீமையில் நடந்துவரும் மற்ற மின் திட்ட பணிகள் குறித்த அறிக்கையை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டது.
கடந்த மாதம் 19.03.2025 நடைபெற்ற ஆணையத்தின் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குறிப்புகளின் விவரம் 28.03.2025 அன்று வெளியிடப்பட்டது. ஆணையத்தின் விவாதத்தில் குந்தே, மேல் பவானி மற்றும் இதர நீரேற்று புனல் மின் திட்டங்கள் குறித்த விவரமும் அடங்கின.
செயல்பாட்டிற்கு வரும் குந்தே மின் திட்டம்
நான்கு அலகுகள் மூலம் 500 மெகா வாட் திறனுள்ள குந்தே நீரேற்று புனல் மின் திட்ட பணிகள் விரைந்தது நடந்து வருகின்றன. அலகு 4 - ஜூலை 2025, அலகு 3 - ஆகஸ்ட் 2025, அலகு 2 மற்றும் 1 - நவம்பர் 2025 என வருகிற 2025 நவம்பர் மாதம் குந்தே நீரேற்று மின் திட்டம் பயன்பாட்டிற்கு வரும்.
குந்தே மின் நிலையம் 7 முதல் குந்தே மின் நிலையம் 2 வரை 175 மெகா வாட் மின்சாரம் கடத்தி செல்ல மின் பரிமாற்ற கோபுரங்கள் அமைப்பதற்கான பணிகளுக்கு வனத்துறையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள மின்சாரம் கடத்த, பரலி மின் நிலையம் வரை மின்சார கோபுரங்கள் அமைக்க திட்டம் உள்ளது. இந்த 14 கிலோமீட்டர் தூரத்திற்கு மின் கோபுரங்கள் அமைக்க வனத்துறையின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. வன துரையின் ஒப்புதல் பெற்றவுடன் பணிகள் துவங்கும்.
இந்த பணிகளுக்காக வனத்துறைக்கு தரவேண்டிய ₹900 கோடி தொகையை, அரசிடமிருந்து மின் பகிர்மான கழகத்திற்கு வரவேண்டிய நிலுவை தொகையில் கழித்துக்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல் பவானி நீரேற்று புனல் மின் திட்டம்
1000 மெகா வாட் திறன் கொண்ட மேல் பவானி நீரேற்று புனல் மின் திட்டத்தை செயல்படுத்தும் பணிகள் கூட்டு முயற்சி அடிப்படையில் NTECL நிறுவனத்திற்கு தரப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார்செய்யப்பட்டு களப்பணிகள் நடந்துவருவதாக செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுப்போக 13,500 மெகாவாட் மின்னுற்பத்தி செய்வதற்கான நீரேற்று புனல் மின் திட்டங்களுக்கு செந்தமிழ்நாட்டின் அரசு கொள்கை ஒப்புதல் அளித்துள்ளதாக மின் ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
சில்ல ஹல்லா நீரேற்று புனல் மின் திட்டம்?
சில்ல ஹல்லா என்ற பெயர் இந்த அறிக்கையில் இல்லை. மேல் பவானி நீரேற்று புனல் மின் திட்டம் (4 x 250 MG) என்ற பெயர் தான் அறிக்கையில் இருக்கிறது. இரண்டு திட்டங்களும் வெவ்வேறா இல்லை ஒன்று தானா என்பதை அரசு தெளிவு தர வேண்டும். ஏனெனில் 25.03.2025 அன்று நடைபெறவிருந்த மக்கள் கருத்துகேட்பு கூட்டத்திற்கான அறிவிப்பில் சில்ல ஹல்லா நீரேற்று புனல் மின் திட்டம் என்று தான் குறிப்பிடப்பட்டிருந்தது.
எதுவாக இருதாலும், மென்மையான மண், நிலச்சரிவு அபாயம், உயிர் சூழல் மண்டல பாதிப்பு, பூர்வகுடிகள் மற்றும் பழங்குடிகளின் அடையாளம் என எதை பற்றியும் கவலை இல்லாமல், அணை கட்டுவதில் முழுமூச்சில் இருக்கிறது அரசு.
Comments