இ-பாஸ் எதிர்ப்பு - தீர்ப்பை திரிக்கும் சதி
- Revanth Rajendran
- Apr 15
- 3 min read
நீலகிரி - ஓர் விவசாய பூமி, உயிர்கோளக் காப்பகம் என்னும் உண்மையை மறைத்து, இது ஒரு சுற்றுலா தலம் மட்டுமே என்னும் பொய்யை நிறுவுவதற்கு பல முயற்சிகள் பல காலங்களாக இங்கு நடந்து வருகிறது. இதில் அரசின் முயற்சிகளும் அடங்கும். அதுபோன்ற பொய் தான் ' நீலகிரி மலை வாழ் மக்கள்' இ-பாஸ் செயல்முறையை எதிர்க்கிறார்கள் என்பது.
வரைமுறையற்ற சுற்றலா திட்டங்களால், இம்மலை தேசமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்திருந்தது. நீலகிரி மாவட்ட நிர்வாகமும் சுற்றுலா என்னும் ஒரு பிரிவை சரிவர மேற்பார்வை செய்யவில்லை என்பது தான் உண்மை. அதனாலேயே நீலகிரியின் கழுத்தை நெறிக்கும் அளவிற்கு சுற்றுலா பெருக்கெடுத்தது. ஒரு வாரத்திற்கு சுமார் 140000 வாகனங்கள் நீலகிரிக்குள் வருவதை அறிந்து மாண்பமை நீதிமன்றமே அதிர்ச்சி அடைத்தது.
மக்களின் வாழ்வாதாரம், மருத்தவ அவசரஉதவி, வன உயிர், சுற்றுசூழல், மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதி, ஆகிய அனைத்தும் கருத்தில் கொண்டு தான் இ-பாஸ் முறையை அமல்படுத்தி, நீலகிரிக்குள் வரும் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி கடந்த மார்ச் 13 2025 அன்று மாண்பமை மெட்ராஸ் உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால் இந்த தீர்ப்பு வந்த நாளிலிருந்தே, இந்த தீர்ப்பை திரிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, உண்மைக்கு புறம்பான பிரச்சாரம் இங்கு நடந்து வருகிறது.
இ-பாஸ் செயல்முறையை எதிர்ப்பது யார்? ஆதரிப்பது யார்?
ஏப்ரல் மாதம் துவக்கம் முதல் இ-பாஸ் செயல்முறை நடைமுறைக்கு வரும் என்ற தீர்ப்பை தொடர்ந்து கடந்த 02.04.2025 அன்று நீலகிரி வியாபாரிகள் பெருவாரியானோர் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 90 சதவீதத்திற்கு மேற்பட்ட கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆனால் இது எந்த வகையிலும் சுற்றுலா பயணிகளின் வருகையை நிறுத்தவில்லை. மக்களின் எல்லா பிரச்சனைகளிலும் மெத்தன போக்கு காட்டும் நிர்வாகம், இந்த போராட்டத்தை தொடர்ந்து உடனடியாக, இ-பாஸ் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென நீதிமன்றத்தில் முறையிட்டது.
வியாபாரிகளுக்காக அரசு நீதிமன்றத்தில் முறையிட்டதில் தவறவில்லை. ஆனால் 'மக்கள்' எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்ற கருத்தோடு நீதிமன்றத்தை அணுகியுள்ளது இந்த அரசு. அது மட்டும் இன்றி வியாபாரிகள் தெரிவித்த எதிர்ப்பை, ஒட்டுமொத்த நீலகிரி மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பது போல ஒரு பிம்பத்தை கட்டமைக்க ஒரு முயற்சி நடந்து வருகிறது. அதற்கேற்றாப்போன்றே செய்தி ஊடகங்களில், 'மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்…' 'மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்…' என்றே செய்திகளை வெளியிட்டனர், இன்னும் வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு ஒரு சாட்சி தான் சில நாட்களுக்கு முன் மர்ம நபர்களால் நீலகிரியின் சில பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள். இ-பாஸ் முறையை எதிர்த்து வசனம் எழுதியவர்கள், வெளிப்படையாக யார் எதிர்ப்பது என்பதை குறிப்பிடாமல், இப்படிக்கு மலை வாழ் மக்கள், வணிகர்கள், ஊர் பொதுமக்கள் என மொட்டை கடிதாசி போல் மொட்டை சுவரொட்டியை ஒட்டி சென்றுள்ளனர்.

மலை வாழ் மக்கள் என்றால் எந்த மலை வாழ் மக்கள்? படக, தோடா, குறும்பா, கோத்தா, இருளா என பல பூர்வகுடி மற்றும் பழங்குடி மலை வாழ் மக்கள் மலை தேசத்தில் உள்ளனர். இந்த மக்களின் ஊர்களில் இருந்தோ அல்லது அவர்கள் சார்ந்த நல சங்கங்களிலிருந்தோ தீர்மானங்கள் வந்ததா? ஊர் பொதுமக்கள் என்றால் எந்த ஊர் பொதுமக்கள்? 600க்கும் மேற்பட்ட பூர்வகுடி மற்றும் பழங்குடி கிராமங்கள் உட்பட, அனைத்து தரப்பு மக்களும் வசிக்கும் 1000 ஊர்களுக்கு மேல் இங்குள்ளன இதில் எத்தனை ஊர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன?
எந்த ஆதாரமும் இல்லாமல், வெறுமனே மக்கள்... மக்கள்.. என குறிப்பிட்டு சுவரொட்டிகளை ஒட்டியது மட்டும் அல்ல, அதை ஒட்டியவர்கள் யார் என்றும் தெரியவில்லை. இரவில் வந்து ஒட்டியிருக்கலாம் என்று காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த செயலிலேயே தெரியவேண்டாமா, இது ஒரு பொய் பிரச்சாரம் என்று.
அந்த சுவரொட்டியில் இப்படிக்கு வணிகர் சங்கம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது, அதற்கு வணிகர் சங்கம் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.
மக்கள் எதிர்க்கிறார்கள் என்ற பெயரில் மாண்பமை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை திரிக்க இத்தகைய பொய் பிரச்சாரம் இவ்வளவு வெளிப்படையாய் நடப்பதற்கு ஒரே ஒரு காரணம் தான். அது என்னவென்றால், இ-பாஸ் செயல்முறையை ஆதரிக்கும் மக்கள் அமைதியாய் இருப்பதால் தான். நல்லது நடந்துள்ளது என்ற நிம்மதியில் அவரவர் அன்றாட வேலையை கவனிக்க சென்றுவிட்டார்கள். ஆதரிப்பவர்களின் அமைதியை பயன்படுத்தி, சுற்றுலாவால் பெரிதும் பயன்பெறும் ஒருசிலர் செய்யும் வேலை தான் இது.
சுற்றுலாவால் பெரிதும் பயன்பெறுபவர்கள் யார்?
ஏப்ரல் 2 கடை அடைப்பின் போது துணி கடைகள், மளிகை கடைகள், நகை கடைகள், கட்டுமான பொருள் கடைகள், விவசாயம் சார்ந்த கடைகள் என 90 சதவீதத்திற்கும் மேல் கடைகள் மூடப்பட்டன. சற்றே சிந்திப்போம், சுற்றுலா பயணிகளை நம்பி தான் மளிகை கடைகள் துவங்கப்பட்டனவா? துணி வாங்கத்தான் சுற்றுலா பயணிகள் வருகிறார்களா? பெரும் நகரங்களில் கிட்டாத நகை, நீலகிரியில் கிட்டுமா? கட்டுமான பொருள் கடை ???? விவசாயம் சார்ந்த கடைகள்????????????
ஏப்ரல் 2 அன்று இ-பாஸ் முறையை எதிர்த்து அடைக்கப்பட்டிருந்த கடைகள்.
இரண்டு பிரிவுகள்தான் பெரும் அளவில் சுற்றுலாவால் பயனடைகிறார்கள். ஒன்று உணவகங்கள். மற்றொன்று தங்கும் விடுதிகள். தெளிவாக சொல்லவேண்டுமானால் 575 தங்கும் விடுதிகளும் (Bread & Breakfast and Homestay) பிற சொகுசு விடுதிகளும்.
நீலகிரியை வெறுமனே வணிகமாக பார்த்து, சுற்றுலா பயணிகளை மட்டுமே குறி வைத்து அளவுக்கு அதிகமான விடுதிகளை கட்டிவைத்துவிட்டு, இ-பாஸை எதிர்ப்பது நியாயமல்ல. சுற்றுலா பயணிகளின் வருகைக்கு ஏற்றவாறுதான் விடுதிகளை அமைக்க வேண்டும். இஷ்டத்திற்கு விடுதிகளை அமைத்துவிட்டு சுற்றுலாப்பயணிகளை இழுக்க கூடாது. அவ்வாறு வரைமுறை இல்லாமல் ஈர்த்ததால்தான் மலை தேசம் ஸ்தம்பிக்கும் அளவிற்கு நெரிசல் ஏற்பட்டது. அதை சரி செய்யவே இ-பாஸ் முறையை ஒரு நல்ல தீர்வாக மாண்பமை உயர்நீதி மன்றம் தந்தது.
மாண்பமை நீதிமன்றம் கூறியது என்ன?
கடந்த 8ஆம் தேதி நடந்த விசாரணையில், இந்த எதிர்ப்புக்கு மாண்பமை நீதிமன்றம் விளக்கம் அளித்தது. நீதியரசர்கள் கூறியதாவது, வாகனங்களுக்கு தான் கட்டுப்பாடு சுற்றுலா பயணிகளுக்கு அல்ல. அதாவது எத்தனை சுற்றுலா பயணிகள் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் இஷ்டத்திற்கு வாகனங்கள் வர கூடாது.
இதில் சிறிய குழப்பம் என்னவென்றல், எத்தனை பேருந்துகள், எத்தனை மகிழுந்துகள், எத்தனை இரு சக்கர வாகனங்கள் என்ற தெளிவு தான் இல்லை. அதையும் மாண்பமை நீதிமன்றம் தெளிவு படுத்தும் என்ற நம்பிக்கை உண்டு.
மேலும் வாகன கட்டுப்பாட்டை செயல்படுத்துவதில் என்ன சிரமங்கள் இருக்கின்றன என்று விளக்கம் தருமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு மாண்பமை நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. அது வருகின்ற ஏப்ரல் 25 அன்று விசாரணைக்கு வருகிறது.
இ-பாஸ் நடைமுறைக்கு வந்தவுடன், இதற்க்கு முன் நன்கு வேலைசெய்த செயலிகள், திடீரென பழுதடைந்து, நாடுகாணி எல்லையில் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நெரிசலில் நின்றன என்று செய்திகள் வந்தன. இது போன்ற தொழில்நுட்ப கோளாறுகள் வராதவாறு சரி செய்து வேண்டாத விமர்சனங்களை நீலகிரி நிர்வாகம் தவிர்க்க வேண்டும்.
மொத்தத்தில் மக்கள் எதிர்க்கவில்லை
எனவே இதுவரை நடந்தது போல, பொத்தாம் பொதுவாக 'மக்கள் எதிர்க்கிறார்கள், மலைவாழ் மக்கள் எதிர்க்கிறார்கள், ஊர் பொதுமக்கள் எதிர்க்கிறார்கள் என்ற தீர்ப்பை திரிக்க முயலும் பொய் பிரச்சாரத்தை வளர்க்க கூடாது. அரசும் மற்ற செய்தி ஊடகங்களும் இந்த பொய் பிரச்சாரத்தின் வலையில் சிக்க கூடாது.
பூர்வகுடிகள், பழங்குடிகள், வணிகர்கள், வன உயிர், சுற்றுசூழல், விவசாயிகள், சுற்றுலா துறையில் இருப்போர் என அனைவருக்கும் சமமான நீதியை வழங்குவது தான், இந்த இ-பாஸ் நடைமுறை. சுற்றுலா துறையில் இருப்பவர்கள் மட்டும் மக்கள் அல்ல பூர்வகுடிகள், பழங்குடிகள் மற்றும் நீலகிரியில் குடியுள்ள சுற்றுலா துறைக்கு வெளியில் இருப்பவர்களும் மக்கள் தான்.
எனவே தீர்ப்பை திரிக்க முயலும் இ-பாஸ் எதிர்ப்பு கண்டனத்திற்குரியது. உண்மையிலேயே இ-பாஸ் முறையால் பாதிக்கப்படுபவர்கள் நியாயமான நேர்மையான கோரிக்கையை முன்வைக்க வேண்டும். அதை விடுத்து மாண்பமை நீதிமன்றத்தின் தீர்ப்பை திரிக்க 'மக்கள் எதிர்க்கிறார்கள்' என்ற பொய் பிரச்சாரத்தை மேற்கொள்ளக்கூடாது. அரசு இதை தடுக்க வேண்டும். மேலும் அந்த சுவரொட்டிகளை ஒட்டியவர்களை விரைவில் கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
நீலகிரியை காக்கும் இ-பாஸ்!
e pass very good