விரைவில் துவங்கும் மனித வேட்டை - பதிவு 1
- Revanth Rajendran
- Feb 9
- 3 min read
Updated: Mar 16
வனவிலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான உறவென்பது ஒன்றை ஒன்று நன்கு புரிந்து அமைதியோடு வாழும் உறவே ஆகும். நான் குறிப்பிடுவது இன்றைய நிலையை குறித்து அல்ல. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அவ்வாறு தான் இருந்தது
குறிப்பாக வனவிலங்குகளும் பூர்வகுடிகளும் ஒரே வனப்பகுதியில் இயற்கையின் அனைத்து வளங்களையும் பகிர்ந்து அமைதியான அச்ச்சமில்லா வாழ்வையே வாழ்ந்து வந்தனர்.
என்றைக்கு இந்த மலையும் வனமும் வணிகம் ஆனதோ அன்றிலிருந்து விலங்குகளும் மனிதர்களும் ஒன்றை ஒன்று கண்டு அச்சதோடு வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது.
வணிகமான நீலமலை
மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய மனித வரலாற்றை கொண்டதே நீலமலை. படக, குறும்பா, தோடா, கோத்தா என பூர்வகுடிகளும் பழங்குடிகளும் அவர் அவர் பகுதியில் அமைதியாய் வாழ்ந்து வந்தனர். அதுபோலவே காடெங்கும் சுற்றித்திரியும் வன விலங்குகளும் மனிதர்கள் வாழும் இடமறிந்து, அதைவிட்டு விலகி சென்றே வாழ்ந்து வந்தன.
அது எவ்வாறு? விலங்குகள் மனித வாழ்விடத்தை விட்டு விலகி சென்றன?
உண்மையை கூறவேண்டுமெனில் இது அனைத்து உயிர்களுக்கும் உள்ள ஒரு வாழ்வியல் குணம். எந்த உயிரினமாய் இருந்தாலும், மனிதர்கள் உட்பட, அது மற்றொரு உயிரினத்தை கண்டால், எதிர் வரும் உயிரினத்தின் பாதையிலிருந்து விலகி செல்லவே முயலும்.
நினைவுகூர்ந்து பாருங்கள், நீங்கள் சாலையில் நடந்து செல்லும் வேளையில் எதிரே ஓர் நாயோ, பூனையோ, மாடோ, ஆடோ வந்தால், அவை அமைதியாய் வந்தால் கூட நீங்கள் இயல்பாகவே அதன் மீது அதீத கவனம் செலுத்துவீர்கள், சற்றே விலகி நடப்பீர்கள். அதுவே, எதிரே வேறு மனிதர்கள் நடந்து வந்தால் அவர்களை அத்தனை உன்னிப்பாக கவனிக்க மாட்டீர்கள். உரசி நடந்தால் கூட அதை பெரிதாக கண்டுகொள்ளமாடீர்கள். இதுபோலவே விலங்குகளும் மற்ற உயிரினங்களை கண்டால் சற்றே விலகி நிற்கும்.
இவ்வாறு தான் உலக உயிர்கள் அனைத்தும் ஒன்றை ஒன்று மதித்து, தொந்தரவு செய்யாமல் அமைதியாய் வாழ்ந்து வந்தன.
இவ்வாறு இருந்த சூழல் மாற துவங்கியதற்கு காரணம் வணிகம் தான். இருநூறு ஆண்டுகளுக்கு முன் பணப்பயிரான தேயிலை, காப்பி ஆகியவற்றை பயிரிட, ஆங்கிலேயர்கள் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவு வனத்தை அழித்தனர். இன்று மீதமுள்ள வனத்தை சுற்றுலா வளர்ச்சி, சொகுசு விடுதி, தங்கும் விடுதி கட்டி வருமானம் ஈட்டும் நோக்கத்தோடு அழித்து வருகின்றனர்.
வனத்தை அழித்து பாதையை அடைத்த பின் வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் வேறு எங்கு செல்லும்? வனஉயிர்கள் வேண்டுமென்றே மனிதர்கள் இடத்திற்குள் வருவதில்லை, வேறு வழியின்றி தான் வருகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
அதிகரித்த வனவிலங்கு முற்றுகை
வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியேற துவங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. முதலில் வந்தன காட்டு பன்றிகள், அவற்றை பிந்தொடர்ந்து வந்தவை காட்டெருமைகள். அன்றைக்கே வனத்துறையும் அரசும் இதனை தீவிரமாக பார்த்திருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக நீலகிரி முழுவதும் பல இடங்களில் யானைகளின் முற்றுகை தொடர்ந்து அதிகரித்து வந்தன. மேலும் யானை தாக்கி உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தன.
இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் ஏன் இவ்வளவு வனவிலங்கு முற்றுகைகள் நடக்கின்றன என்பதை வனத்துறை ஆராய்ந்திருக்க வேண்டும். மாறாக "யானைகளின் வழித்தடங்களை பற்றி யாருக்கும் முழு அறிவு கிடையாது" என்று அமைச்சர் சட்டசபையில் பொறுப்பற்று பேசுகிறார்.

அரசு அதிகாரம், குறையில்லா நிதி, மெத்த படித்த ஆட்சி பணி அதிகாரிகள், ஒரு முழுமையான துறை அதில் பல நூறு அலுவலர்கள், பூர்வகுடிகள் மற்றும் பழங்குடிகளின் பாரம்பரிய அறிவு மற்றும் அவர்களின் ஒத்துழைப்பு, மேலும் உலகின் எந்த மூலையிலிருந்தும் வல்லுநர்களை வரவழைக்க கூடிய பலம் ஆகிய அனைத்தையும் வைத்துக்கொண்டு, அமைச்சர் தந்த பதில், "முழு அறிவு இல்லை என்பதுதான்"
அறிவில்லை என்பது உண்மை தான் போலும்.
யானை கூட்டங்கள் இடம் பெயர பயன்படுத்தும் வழித்தடமானது நிலையான ஒன்று. அதாவது யானைகள் ஒரே வழித்தடத்தை தான் நிலையாக பயன்படுத்தும். காட்டை கடந்து செல்ல ஒவ்வொவொரு முறையும் புதிய பாதைகளை பயன்படுத்தாது. அதன் பாதையில் சுற்றுலா விடுதிகள் போன்றே மனித நடமாட்டங்கள் இருந்தால் மட்டுமே அவைகள் பாதை மாறும். ஒற்றை யானைகளும் ஒரு குறிப்பிட்ட வன பகுதிக்குள் சுற்று திரியுமே தவிர, பாதையில் தடைகள் ஏற்படாமல் வெளியே வராது.
வனவிலங்குகளின் பாதையில் இருக்கும் தடைகள் என்னவென்று ஆராய்ந்து அவற்றை நீக்கினாலே பெருவாரியான யானை முற்றுகைகளை தவிர்க்கலாம்.
இவற்றை விடுத்து மேலும் மேலும் சுற்றுலா வளர்ச்சி முறையில்லா கட்டுமானம் என அனைத்திற்கும் அனுமதி அளித்துவிட்டு. யானைகள் ஊருக்குள் வந்தபின், பல நூறு ஆண்டுகளாக அமைதியாய் வாழ்ந்து வரும் பழங்குடிகளை வெளியேற்றுவது எந்த வகையில் பயனளிக்கும்? இது உண்மையில் நீதி தானா?
மக்கள் காட்டிற்குள் சென்றால் வன விலங்குகளுக்கு தொந்தரவு என்றால், ட்ரேக் தமிழ்நாடு (Trek TamilNadu) என்ற பெயரில், காடுகள் வழியாக மலையேறும் சாகச சுற்றுலா திட்டத்தை அரசு துவங்கியது, எந்த வகையில் வனத்திற்கும் மக்களுக்கும் நல்லது என்பதை தமிழக வனத்துறை தான் விளக்க வேண்டும். போதிய வாழ்விடம் இல்லாமல் வனவிலங்குகள் வெளியேறிக்கொண்டுள்ள நிலையில் மலையேறும் சாகசம் அவசியம் தானா?
இதன் விளைவு என்ன ?
காட்டுப்பன்றி, காட்டெருமை, யானை ஆகியவற்றை பிந்தொடர்ந்து தற்போது சிறுத்தைபுலிகளும், புலிகளும் ஊருக்குள் உலா வருகின்றன.
பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே பன்றிகளும் காட்டெருமைகளும் ஊருக்குள் உலாவர துவங்கிவிட்டன. குடியிருப்பு பகுதிகள் மட்டும் இன்றி, நகரின் மையத்திற்குள்ளும் யானைகள் முற்றுகையிட்டு செல்கின்றன. அவ்வப்போது யானை தாக்கி மனிதர்கள் இறப்பது தற்போது இயல்பான செய்திபோல் ஆகிவிட்டது.
அதுபோலவே புலிகளும், சிறுத்தைப்புலிகளும், அவ்வபோது ஊருக்குள் வந்து செல்லும் காணொளி காட்சிகள் செய்திகளில் வருகின்றன. பல கிராமங்களில் ஊர் மக்கள் கண்ணெதிரே புலிகளை கண்டுள்ளனர்.
இந்த காட்சிகள் மட்டும் செய்திகளில் வர, வெளிவராத செய்தி என்னவென்றால், புலிகள் ஊருக்குள் தங்கள் வேட்டையை துவங்கி விட்டன என்பது தான்.
Comments