விடையில்லா தேவர்பெட்டா. தெளிவில்லா வனத்துறை.
- Revanth Rajendran
- Feb 24
- 3 min read
Updated: Mar 16
கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் 25 அன்று ட்ரேக் தமிழ்நாடு (Trek TamilNadu) என்ற மலையேறும் சாகச பயண திட்டத்தை தமிழக வனத்துறை துவங்கியது. இதற்காக தமிழகம் முழுவதிலிருந்தும் 40 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இத்திட்டத்திற்கென தனி குழுக்கள் இணையதளம் ஆகியவை உருவாக்கப்பட்டு தற்போது செயல்பாட்டில் உள்ளன.
ட்ரேக் தமிழ்நாடு - Trek TamilNadu
இத்திட்டத்தை குறித்து சுருக்கமாக கூறவேண்டும் என்றால், வனத்தின் வழியே மலைமேடுகளுக்கும் சிகரங்களுக்கும் செல்லும் சுற்றுலா நடை பயணம் ஆகும். ட்ரேக் தமிழ்நாடு திட்டத்தின் மூலம் மலையேற்றம் செல்ல வேண்டும் என்றால், இத்திட்டத்திற்காக வனத்துறை உருவாக்கியுள்ள அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும். பின் குறிப்பிட்ட நாளில் இதற்காக நியமிக்கப்பட்ட வனத்துறை வழிகாட்டிகள் மலையேற்ற சாகசத்திற்கு அழைத்து செல்வார்கள். மொத்தத்தில் கட்டணம் செலுத்தி வனத்திற்குள் செல்லும் சுற்றுலா தான் இது.
நீலமலையில் மலையேற்ற பாதைகள்
தமிழ்நாட்டில் உள்ள 40 மலையேற்ற தலங்களில் 11 தலங்கள் நீலமலை மாவட்டத்தில் அமைந்துள்ளன.
Cairn Hill - கேயின் ஹில்
Longwood Shola - லாங்க்வுட் ஷோலா
Karikkayur to Porivarai Rock Painting - காரிக்காயூர் முதல் பொரிவரை பாறை ஓவியம்
Karikkayur to Rangasamy Peak - காரிக்காயூர் முதல் ரங்கசாமி சிகரம்
Parson Valley to Mukurthi Hut - பார்சன் பள்ளத்தாக்கு முதல் முகூர்த்தி குடில்
Pandiyar Rest House to Mukurthi Dam - பாண்டியார் ஓய்வகம் முதல் முகூர்த்தி அணை
Avalanche to Kolaribetta - அவலாஞ்ச் முதல் கோலாரிபெட்டா
Avalanche to Deverbetta - அவலாஞ்ச் முதல் தேவர் பெட்டா
Cauliflower Shola to Kolaribetta - காலிஃப்ளவர் ஷோலா முதல் கோலாரிபெட்டா
Gene Pool - ஜீன் பூல்
Needle Rock - நீடில் ராக்
தேவர் பெட்டா
குந்த சீமை, முள்ளிகூர் அருகே அமைந்துள்ள தேவர் பெட்டா சிகரமானது, பூர்வகுடி படக மக்களின் இயற்கை வழிபாட்டு தலங்களுள் ஒன்றாகும். முள்ளிகூர், பிக்கட்டி, ஒசா ஹட்டி, கெரப்பாடு என நான்கு ஊர் மக்கள் வருடாந்திர பூசை நடத்தி தேவர் பெட்டாவிற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நான்கு ஊர் மக்கள் மட்டும் அல்லாமல் பூர்வகுடிகள் உட்பட பலரும் இந்த மலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
தெய்வத்தின் மலை என்பதை தாண்டி, அம்மலையே தெய்வம் என்பது தான் படக மக்களின் நம்பிக்கை. பூர்வகுடிகளின் இயற்கை வழிபாட்டின் அடையாளமாக திகழும் இச்சிகரத்தை சுற்றுலா தலமாக மாற்றுவது, பூர்வகுடி மக்களையும் அவர்களது வாழ்வியலையும் அவமதிக்கும் செயலாகும்.
மக்களை மதிக்காத அரசு
தேவர் பெட்டா சிகரத்தை சுற்றுலா தலமாக்கும் திட்டத்தை எதிர்த்து நான்கு ஊர் மக்களும் நீலமலை மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியிருந்தனர். நான்கு ஊர் தலைவர்கள் உட்பட மக்கள் அனைவரும் கையெழுத்தியக்கம் நடத்தி, அனுப்பப்பட்ட மனுவின் நகலானது, வனத்துறை அமைச்சர், வனத்துறை செயலாளர் மற்றும் மாவட்ட வன அலுவலர் ஆகியோருக்கு 18.11.2024 அன்று அனுப்பப்பட்டது.
தேவர் பெட்டா மலை பகுதியை அறிவிக்கப்பட்டுள்ள ட்ரேக் தமிழ்நாடு திட்டத்திலிருந்து விளக்கிட வேண்டும் என்றும், படக வழிபாட்டு தலத்தில் வேறு எந்த சுற்றுலா நிகழ்வும் நடக்காமல் பாதுகாத்து தர வேண்டும் என்றும் அம்மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
நாற்பது நாட்களுக்கு மேலாகியும் மாவட்ட நிர்வாகத்திடமிருந்தோ, வனத்துறையிடமிருந்தோ எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இணையதளத்திலிருந்து தேவர் பெட்டா பாதை நீக்கப்படாததை அடுத்து 06.01.2025 அன்று தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம், வனத்துறையின் பொது தகவல் அதிகாரிக்கு கடிதம் எழுதப்பட்டது.
தேவர் பெட்டா ட்ரேக் தமிழ்நாடு திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதா இல்லையா.
இதுவரை எத்தனை சுற்றுலா பயணிகள் தேவர் பெட்டா சிகரத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர் என்னும் விவரம் வேண்டி அக்கடிதம் எழுதப்பட்டது.
நாற்பது நாட்கள் ஆகியும் கூட தகவல் அறியும் உரிமை சட்ட மனுவிற்கு பதில் வரவில்லை.
இந்த அரசும் நிர்வாகமும் மக்களை மட்டும் இல்லை, சட்டத்தையும் மதிப்பதில்லை என்பது தான் உண்மை. தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கூறுகிறது சட்டம்.
கடினமான கேள்வியாக இருந்தால் கூட கால தாமதத்தை ஏற்றுக்கொள்ளலாம்.
நீக்கப்பட்டதா இல்லையா ? ஆம் / இல்லை
எத்தனை பேர் சென்றார்கள்? எண்ணிக்கை விவரம் நிச்சயம் இருக்கும், அதை குறிப்பிட்டால் போதும்.
இதை கூட சொல்லாமல் வேண்டுமென்றே காலதாமதம் செய்கிறது வனத்துறை. மாவட்ட நிர்வாகம் சார்பிலும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.
வன பாதுகாப்பில் விரிசல்
இத்திட்டம் பூர்வகுடி மக்களின் அடையாளத்தை அழிப்பது மட்டும் அல்ல, வன பாதுகாப்பிற்கு முற்றிலும் எதிரானது.
கடந்த சில காலமாக சிறுத்தைப்புலிகள் மற்றும் புலிகளின் முற்றுகை குந்தா பகுதியில் மிக அதிமாக உள்ளது. ஏற்கனவே வன விலங்குகள் காட்டை விட்டு வெளியேறி ஊருக்குள் சுற்றித்திரியும் வேளையில், மனிதர்களை தினந்தோறும் காட்டிற்குள் அழைத்து செல்லும் சாகச பணயம் அவசியம் தானா?
வனம் சார்ந்த அறிவை மக்களுக்கு ஊட்டும் பொறுப்பு வனத்துறைக்கு உள்ளது. அதற்க்காக வனவிலங்குகளை அதன் வாழ்விடத்திற்க்கே தினம்தோறும் சென்று தொந்தரவு செய்யும் இந்த சாகச பயணம் மூலம் தான் அந்த அறிவை பரப்ப வேண்டுமா?
புலிகளும் சிறுத்தைப்புலிகளும் ஊருக்குள் புகுந்து நாய்கள், மாடுகள் என பல கால்நடைகளை வேட்டையாட துவங்கிவிட்டன, மனித வேட்டை துவங்கி விடுமோ என்ற அச்சம் நிலவும் வேளையில், மலையேறும் சாகசம் ஒரு கேடா?

வனவிலங்குகளின் நடமாட்டத்தை குறித்து எங்களுக்கு போதிய 'அறிவில்லை' என்று அமைச்சர் சட்டசபையில் பதில் அளித்துள்ளார். உரிய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சிகளை நடத்தி அந்த அறிவை வளர்ப்பதில் வனத்துறை கவனம் செலுத்தலாமே. மாறாக பூர்வகுடிகள் அடையாளத்தை மதியாமல், வனவிலங்குகளின் முற்றுகையை கவனத்தில் கொள்ளாமல், பணக்காரர்களின் பொழுதுபோக்கிற்காக இவ்வளவு முனைப்போடு செயல்படுவது ஏன்?
குந்தா பகுதி கிராமங்களின் முக்கிய நீர் ஆதாரங்களின் ஒன்றாகவும், படக பூர்வகுடிகளின் வழிபாட்டு தலமாகவும், வன விலங்குகளின் செழிப்பான வாழ்விடமாக அமையும் வனப்பகுதிகள் சூழ்ந்துள்ள ஒரு பகுதியாக அமைந்தது தான் இந்த அவலாஞ்சி முதல் தேவர் பெட்டா வரையிலான பகுதி.
வனஉயிர் மற்றும் நீர் ஆதாரத்தை சார்ந்து முக்கியத்துவம் பெற்றதாகவும், படக பூர்வகுடிகள் இயற்கை வழிபாடு மற்றும் அடையாளமாகவும் விளங்கும் தேவர் பெட்டா பகுதியை சுற்றலா பகுதியாக மாற்றியது மக்களையும் இயற்கையையும் மதியா செயலாகும்.
ஊர்கூடி கோரிக்கை வைத்தும் அரசு கண்டுகொள்ளவே இல்லையென்றால் வேறென்ன செய்வது?
போராட்டம் தான் தீர்வா?
மக்களின் அனைத்து குறைகளுக்கும் போராட்டம் தான் தீர்வு என்றால், பின் இத்தனை அதிகாரிகள் எதற்காக, நிர்வாகம் எதற்காக? மக்கள் பிரதிநிதிகள் எதற்காக?
Comentarios