க. ராமச்சந்திரன் பதவி பறிப்பு. ஒதுக்கப்பட்ட பூர்வகுடி
- Revanth Rajendran
- Nov 7, 2024
- 4 min read
தமிழக அரசியலில் பல மாற்றங்கள் கடந்த சில காலமாக ஏற்பட்டுவருகிறது. அதில் முக்கியமான ஒன்று, கடந்த செப்டம்பர் மாதம் செய்யப்பட்ட அமைச்சரவை மாற்றம். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க, சிறையிலிருந்து வெளிவந்த செந்தில் பாலாஜி உட்பட மேலும் புதியதாக மூவர் அமைச்சர்களாக பதவியேற்றனர். பொறுப்பேற்ற அமைச்சர்களுக்கு வாழ்த்துக்கள்.
உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்கும் இந்த முயற்சியில், ஏற்கனவே அமைச்சராக இருந்த மூவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். அம்மூவர் யாரெனில் மனோ டி தங்கராஜ், செஞ்சி மஸ்தான் மற்றும் க. ராமச்சந்திரன்.
இந்த மூவரில் க. ராமச்சந்திரனை அமைச்சரவையிலிருந்து நீக்கியதை சாதாரண அரசியல் நகர்வாக கொள்ளக்கூடாது. ஏனெனில் அவர் தனி மனிதன் அல்ல. தமிழ் நாடு மாநிலத்தில் தமிழினத்திற்கு அடுத்தபடியாக, பூர்வீக இனக்குழுவாக உள்ள படக இனத்தின் பிரதிநிதியாகவே பார்க்கப்பட வேண்டும்.
இல்லித்தோரை க. ராமச்சந்திரன்

நீலகிரி மாவட்டம் இல்லித்தோரை கிராமத்தை சேர்த்த க. ராமச்சந்திரன் படக பூர்வகுடி ஆவார். பல ஆண்டுகளாக திராவிட முன்னேற்ற கழகத்தில் உறுப்பினராக உள்ள இவர் மூன்று முறை (2006, 2011, 2021) சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. மாறாக திமுக சார்பாக தேர்தல் களம் கண்ட ப. மு. முபாரக் தோல்வி அடைந்தார்.
மேலும் க. ராமச்சந்திரன் இரண்டு முறை அமைச்சராகவும் பதவி வகித்தார். குறிப்பாக 2006ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் ஐந்தாண்டுகள் முழுமையாக அமைச்சராக தொடர்ந்தார்.
2021ஆம் ஆண்டு வெற்றி பெற்ற அவர் முதலில் வனத்துறை அமைச்சராக பதிவியேற்றார், பின் சுற்றுலா வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்டார். கடந்த செப்டம்பர் 29 அன்று அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு அரசு தலைமை கொறடாவாக நியமிக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சரான மு ப சாமிநாதன் நீலகிரியின் பொறுப்பு அமைச்சராக அனுப்பப்பட்டார்.

மறுக்கப்பட்ட பிரதிநிதி
அமைச்சர் பதவி என்பது மிகவும் கவனமாக தரப்படும் பதவியாகும். மாநிலத்தின் அனைத்து சமூகங்களும் பிரதிநிதித்துவம் பெரும் வகையில் தான் அமைச்சரவை தேர்ந்தெடுக்கப்படும். ஓர் அமைச்சரை தேர்ந்தெடுக்கும் பொழுது அரசியல் கட்சியும் அதை சார்ந்த முதல்வரும் பல பொருட்களை கருத்தில் கொள்வர்.
அதுபோல தான் க. ராமச்சந்திரனும் கலைஞர் காலத்திலேயே அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நீலகிரியின் சார்பாக மட்டும் அல்ல படக பூர்வகுடி உட்பட அனைத்து மலை வாழ் பழங்குடி சார்பாகவும் அவர் அமைச்சரவையில் இடம் பெற்றார். இத்தனை முக்கியத்துவம் பெற்ற ஒருவரை அமைச்சரவையிலிருந்து நீக்கி இருப்பது, நீலகிரியின் பூர்வக்குடி மற்றும் பழங்குடிகள் அனைவரையும் ஒதுக்கிவைக்கும் செயலாகும்.
க. ராமச்சந்திரனை அமைச்சர் பதிவியிலுருந்து நீக்கியது ஏன்?
ஊழல் செய்தாரா ராமச்சந்திரன்?
ஆம் என்றால் அவரை நீக்கியது சரியே. ஆனால் ஊழல் குற்றச்சாட்டு தான் காரணம் என்றால் ராமச்சந்திரன் மட்டும் அல்ல ஒட்டுமொத்த அமைச்சரவையும் நீக்கப்பட வேண்டும். ஆகவே ஊழல் என்பது ஒரு காரணம் அல்ல.
செயல்படாமல் இருந்தாரா?
பதவி பறிபோகும் இரண்டு நாள் முன்பு வரையிலும் தமிழகம் முழுவதும் பயணித்து பல சுற்றுலா வளர்ச்சி சார்ந்த திட்டங்களையும், ஆலோசனை கூட்டங்களையும் நடத்திக்கொண்டு தான் இருந்தார். சட்ட மன்ற உறுப்பினர் என்ற முறையில் குன்னூர் தொகுதி மக்கள் குறைகளையும் அறிந்து தொகுதி சார்ந்த பணிகளையும் செய்து கொண்டு தான் இருந்தார். ஆகவே அமைச்சராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் அவரது அன்றாட பணிகள் நடந்து கொண்டு தான் இருந்தன.

வயதாகிவிட்டதோ?
73 வயது ஆனதற்காக ராமச்சந்திரன் நீக்கப்பட்டார் என்றால். 86 வயதாகும் துரை முருகன் நீக்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. இவ்வளவு ஏன் கலைஞர் அவர்களே 92 அகவை வரையிலும் தீவிர அரசியலில் பயணித்தார். அரசியலில் இருந்து விலக வயது ஒரு காரணம் கிடையாது. ஆகவே வயது காரணமாக ராமச்சந்திரன் பதவியிலிருந்து நீக்கப்படவில்லை.
பிறகு காரணமே இல்லாமல் நீக்கப்பட்டாரா? அப்படியானால் பூர்வக்குடிகளையும் பழங்குடிகளையும் ஆளும் திமுக அரசு கருத்தில் கொள்ளவில்லை என்பது தான் அர்த்தம்.
விபரம் அறியாத ஸ்டாலின் ?
அமைச்சர்களை தேர்ந்தெடுக்கும் பொழுது நீலமலை மாவட்டத்தின் மலை வாழ் குடிகளின் முக்கியத்துவம் மற்றும் அவர்களின் பிரதிநிதித்துவம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் சிந்திக்கவில்லை? மலை வாழ் பழங்குடிகளை குறித்து விபரம் அறியாமல் இருக்கிறாரா முதல்வர்?
முதலமைச்சர் அவர்களுக்கு நீலகிரியின் பூர்வகுடிகளை குறித்து எதுவும் தெரியாது என்றே வைத்து கொள்ளலாம். அப்படியெனில் அவர்க்கு எடுத்துரைக்க திமுகவில் யாருமே கிடையாதா?
ஏன் கிடையாது ! நீலகிரியிலிருந்து மூன்று முறை (2009, 2019, 2024) பாராளுமன்ற உறுப்பினரான ஆ. ராசா அவர்களுக்கு தெரியாதா?
நான்கு முறை (2009, 2014, 2019, 2024) நீலகிரியில் தேர்தலில் போட்டியிட்ட ஒருவருக்கு படக, குறும்பா, தோடா, கோத்தா, என பழங்குடிகளின் எண்ணிக்கையும், அவர்களது வாழ்வியல் கலாசார முக்கியத்துவம், மேலும் மாவட்டம் சார்பாக அரசில் கிடைக்கவேண்டிய பிரதிநிதித்துவம் பற்றி தெரியவில்லை என்றால், அவருக்கு நீலகிரியின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதி இல்லை என்று அர்த்தம்.
ஆ.ராசா அவர்களுக்கு இது எதுவும் தெரியாதா இல்லை தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருந்தாரா?
ஆ. ராசா அவர்கள் நீலகிரியின் பாராளுமன்ற உறுப்பினர் மட்டும் அல்ல திமுகவின் துணை பொதுச்செயலாளரும் ஆவார். இத்தனை அரசியல் பலத்தை வைத்துக்கொண்டு க.ராமச்சந்திரனின் பதவி நீக்கத்தை தடுக்காமல் இருந்தது பல கேள்விகளை எழுப்புகிறது.
அவரது சொந்த ஊரான பெரம்பலூரில் அரசியல் செய்ய வாய்ப்பில்லை என்பதால் நீலகிரியில் அரசியல் செய்ய முயல்கிறாரோ என்றே தோன்றுகிறது.

கொறடாவா இல்லை அமைச்சரா?
கொறடா என்பது பெரிதும் அதிகாரம் பெற்ற பொறுப்பு கிடையாது. சட்டசபை இயங்கும்போது அதன் பொது செயல்பாடுகளை கண்காணிக்கும் பதவி தான் அது. கொறடா பதவி வைத்துக்கொண்டு மக்களுக்கு பெரிதும் பயனுள்ளவற்றை செய்திட முடியாது. அதற்காக கொறடா பதவியை குறைத்து மதிப்பிடவில்லை. சட்டப்பேரவை செயல்பாடுகள் அவசியம் தான் ஆனால் அதைவிட அவசியம் உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்காக பணிபுரிவது.
நீலகிரி மலைகளின் பூர்வகுடிகளாக இருந்தும் கூட அதற்கான அடையாளமும் உரிமையும் கிடைக்காமல் படக மக்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர், தேயிலை விலையின்றி விவசாயிகள் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளனர், பூர்வகுடியாக அங்கீகரிக்கப்படாததால் பாரம்பரிய நிலங்களை காப்பாற்ற முடியாமல் மக்கள் திணறுகிறார்கள், வனவிலங்கு முற்றுகை, சுற்றுலாவால் ஏற்படும் இன்னல்கள் என பல துயரத்தில் நீலகிரியின் பூர்வகுடி மக்கள் உள்ளனர்.
இத்தகைய நிலையில் பூர்வகுடிகளுக்கு இருக்கும் ஒரு ஆறுதல் தான் இந்த அமைச்சர் பதவி. பூர்வகுடிக்கான அடையாளமும் உரிமையும் மறுக்கப்பட்டு வரும் வேலையில், தங்களுக்கு பிரதிநிதித்துவம் தரும் ஒரு இடம் என்றால் அது தமிழக அரசில் இருக்கும் இந்த ஒரு அமைச்சர் பதவி தான், தற்போது அதுவும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது அரசியல் ஆதரவு அல்ல மக்கள் ஆதரவு
ஏன் இந்த அமைச்சர் பதவியும் சட்ட மன்ற உறுப்பினர் வாய்ப்பும் பூர்வகுடிகளுக்கு அவசியம்?
ஒரு இனத்தின் தேவையை அந்த இனத்தை சேர்ந்தவர்களால் தான் உறுதி செய்திட முடியும். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு பூர்வகுடிகளின் வாழ்வியல், பழக்கவழக்கம், கலாச்சாரம் ஆகியவற்றை பார்க்க தான் முடியுமே தவிர உணரமுடியாது. அதனை உணர்ந்தால் மட்டுமே அம்மக்களுக்கு வேண்டியதை செம்மையே செய்து தர முடியும். அதுபோல மக்களும் உரிமையோடு முறையிட முடியும்.
தமிழகம் மட்டும் அல்ல உலகம் முழுவதும் இவ்வாறு தானே மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
மக்களின் வாழ்வை உணரவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் படக மக்களின் தேவர் பெட்டா புனித தலத்தை சுற்றுலா தலமாக மாற்றும் முயற்சி.
படக மக்களின் வாக்குகள் வேண்டாமா?
ஒரு சமூகம் சார்ந்தவர்க்கு வாய்ப்பளிப்பதன் மூலமாக தான் அந்த சமூக மக்களின் ஆதரவை பெற முடியும். பிற கட்சிகள் மட்டும் அல்ல திமுகவும் மற்ற இடங்களின் இதை தானே செய்கிறது.
பல பகுதிகள் மற்றும் பல சமூகங்களுக்கு பிரதிநிதித்துவம் தரும் வகையில் தானே அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.
வன்னியர் சார்பாக துரை முருகன், எம் ஆர் கே பன்னீர்செல்வம், எஸ் எஸ் சிவசங்கர் ஆகியோர் உள்ளனர். கொங்கு வேளாள கவுண்டர்களாக முத்துசாமி, சக்கரபாணி, செந்தில் பாலாஜி, மு ப சாமிநாதன். ரெட்டியார் சார்பாக கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், கே ஏன் நேரு. நாயுடு சார்பாக சேகர் பாபு, ஏ வ வேலு, ஆர் காந்தி. முக்குலத்தோர் சார்பாக ஐ பெரியசாமி, தங்கம் தென்னரசு, பி மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உள்ளனர். நாடார் சமூகத்தின் சார்பாக கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன். யாதவர் சமூகம் சார்பாக பெரியகருப்பன், ராஜா கண்ணப்பன்.
மேலும் தா மோ அன்பரசன், பழனிவேல் தியாகராஜன் ஆகிய இருவரும் முதலியார் சமூகத்தினர். இஸ்லாமியர்கள் சார்பாக ஆவடி நாசர். ஆதி திராவிடராக சி வி கணேசன். தேவேந்திர குல வேளாளாளராக கயல்விழி செல்வராஜ்,
அருந்ததியர்களுக்கு வாய்ப்பளிக்க முதல் முறை சட்ட மன்ற உறுப்பினரான மதிவேந்தன் அமைச்சராக்கப்பட்டார்.
முறையே உடையார் சமூகத்திலிருந்து பொன்முடி. செட்டியார் சமூகத்திலிருந்து கோ ரகுபதி. மீனவர் சமூகத்திலிருந்து மா. சுப்ரமணியன். முத்தரையர் சமூகத்திலிருந்து மெய்யநாதன் என தமிழகத்தின் பெருவாரியான சமூகங்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
விடுபட்ட என குறிப்பிடுவதை விட நீக்கப்பட்ட ஒரே இனம் அதுவும் பூர்வகுடி இனம் என்றால் படக குடி மட்டுமே.
படக மக்களின் ஆதரவு வேண்டாம் என்று முதல்வர் முடிவெடுத்துவிட்டாரோ?
பெருவாரியான சமூகங்களுக்கு போதுமான இடம் தரவில்லை என்றால் அந்த சமூக வாக்குகள் சிதறும். ஆனால் நீலகிரி மலைமாவட்டம் முழுதும் பரவி வாழ்ந்து வருகிற பூர்வகுடிகளான படக மக்களின் வாக்குகள் சிதறுவதை திமுக பொருட்படுத்தவில்லை.
படக மக்கள் கேள்வி கேட்க மாட்டார்கள் என்று முதல்வரும் ஆ. ராசாவும் நினைத்துவிட்டார்கள் போலும்.
கேள்வி கேட்பதற்கு மாறாக நேரடி பதில் தரப்படும்
“எங்களுக்கு உரிமையை தாராவிடில் வாக்கு கிடையாது”
“உரிய பணியை செய்யவில்லை எனில் வாக்கு கிடையாது”
“அரசியல் பிரதிநிதித்துவம் தரவில்லை எனில் வாக்கு கிடையாது”
“பூர்வகுடிக்கு அமைச்சர் பதவி இல்லையெனில் வாக்கு கிடையாது”
க. ராமச்சந்திரன் மீது நூறு குற்றச்சாட்டுகள் இருக்கும் விமர்சனங்கள் இருக்கும். ஆனால் பதவியை விட்டு நீக்கும் அளவிற்கு எந்த குறைகளும் இல்லை. நன்றாக நினைவில் இருக்கட்டும் செந்தில் பாலாஜி பிணையில் தான் வெளிவந்திருக்கிறாரே தவிர வழக்கில் இருந்து விடுதலை ஆகி வரவில்லை. அவருக்கே அமைச்சர் பதவி தரப்பட்ட நிலையில், பூர்வகுடியின் பிரதிநிதியான க. ராமச்சந்திரனுக்கு ஏன் மறுக்கப்பட்டது?
எந்த காரணத்திற்காகவும் பூர்வகுடிக்கு அரசியல் அதிகாரத்தை மறுக்க கூடாது.
க. ராமச்சந்திரன் அவர்களை மீண்டும் அமைச்சராக்கிட வேண்டும்
விபரம் அறியாத முதல்வர் ஸ்டாலினிற்கும், பூர்வக்குடியை மதிக்காத ஆ. ராசாவிற்கும் தக்க பதில் தரப்படும்.
வரும் 2026ஆம் தேர்தலில் திமுகவிற்கு தோல்வியே பதிலாக தரப்படும்.
பூர்வகுடிகளுக்கு மரியாதையும் தகுந்த வாய்ப்பையும் மறுக்கும் எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களுக்கு தேர்தல் தோல்வியே பதிலாக அமையும்.
2026 ஆம் ஆண்டு தேர்தலில் வாக்களிக்க செல்லும் முன் பூர்வகுடிகள் நினைவில் கொள்ள வேண்டிய செய்திகளில் இதுவும் ஒன்று.
Comments